Trending

Category :தொழில் | Clothing

செல்போன் மீட்பு, போதைப்பொருள் தடுப்பு, புத்தாண்டு பாதுகாப்பு – கன்னியாகுமரி எஸ்பி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் ரூ.58 லட்சம் மதிப்புள்ள 335 திருட்டு செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக ரூ.2 கோடியே 5 லட்சம் மதிப்புள்ள 1,256 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். பொதுமக்கள் செல்போன் தொலைந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசுகையில், இந்த ஆண்டில் கஞ்சாவிற்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டில் 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அசாம், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் ரயில்களில் அதிக அளவு கஞ்சா பிடிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மொத்த விற்பனையாளர்கள் மீது தொடர்ந்து குண்டாஸ் சட்டம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பைக் ரேஸ் போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 18 வயதிற்கு கீழ் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்தார். இந்த ஆண்டில் மட்டும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டிய சம்பவங்களில் 105 வழக்குகள் பெற்றோர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், குமரி மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் கட்டாயமாக சிசிடிவி கேமரா அமைத்தல் மற்றும் ‘சி-பார்ம்’ விதிமுறைகளை பின்பற்றுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக, கன்னியாகுமரி கடற்கரையில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி கொண்டாட வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான கூடுதல் வழிகாட்டி விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கன்னியாகுமரி எஸ்பி ஸ்டாலின் தெரிவித்தார்.

Author: Nanjil Kural | Date: 2025-12-15 18:33:20

Share this

Latest News

Related Ads